தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை


தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை: அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 21 Sep 2021 2:29 PM GMT (Updated: 21 Sep 2021 2:29 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போக சாகுபடி நடைபெறும். குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 67 ஆயிரத்து 500 ஏக்கரில் அறுவடை பணி முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்றன. வெப்பசலனம் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் பயிர்கள் நனைந்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்றுஅதிகாலை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, பாபநாசம் ஆகிய பகுதிகளில் பல வயல்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மழை நின்றால் கூட பயிர்களை ஓரளவுக்கு காப்பாற்றி விடலாம். எந்திரம் மூலம் 1 மணிநேரத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், தற்போது பயிர்கள் சாய்ந்துவிட்டதால், 1½ மணி முதல் 2 மணி நேரமாகும். இதன்காரணமாக கூடுதல் செலவு ஏற்படும். இந்த மழை தொடர்ந்து பெய்தால் மகசூலில் மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரப்பதத்தை தளர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதேநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த மழை சாதகமாக அமைந்துள்ளது. நிலத்தை உழவு செய்வதற்கும், நாற்றுகள் பறிக்கப்பட்டு, நடவு செய்வதற்கும் இந்த மழை உதவியாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

நெய்வாசல் தென்பாதி-92, மதுக்கூர்-54, பாபநாசம்-42, கல்லணை-40, பூதலூர்-32, அய்யம்பேட்டை-28, வல்லம்-28, திருக்காட்டுப்பள்ளி-24, தஞ்சை-20, பட்டுக்கோட்டை-19, அதிராம்பட்டினம்-16, ஒரத்தநாடு-16, குருங்குளம்-16, கும்பகோணம்-5, திருவிடைமருதூர்-4, மஞ்சளாறு-4, திருவையாறு-3.

Next Story