இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆட்களை கடத்த பயன்படுத்திய படகு பறிமுதல் கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை
இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆட்களை கடத்த பயன்படுத்திய படகை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆட்களை கடத்தி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட படகை, மதுரை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆள் கடத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டை, வெங்காய விதை, பீடி இலை போன்ற பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகின்றன. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனாலும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபகாலமாக ஆட்களை கடத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதற்கிடையே, இலங்கையை சேர்ந்த 40 பேர் மங்களூரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு படகில் வந்து உள்ளனர். பின்னர் மங்களூருக்கு சென்று, அங்கிருந்து கனடா செல்ல இருந்தபோது பிடிபட்டனர். இதேபோன்று மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை மதுரை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்ததும், அங்கிருந்து மதுரைக்கு சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பறிமுதல்
மேலும், இலங்கையில் இருந்து வந்தவர்களில் கணவன், மனைவி 2 பேர் மாயமானார்கள். அவர்களை மதுரை கியூ பிரிவு போலீசார் கீழவைப்பார் பகுதியில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் ஸ்டார்வின் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் அளித்த தகவலின் பேரில், தூத்துக்குடியில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரை கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படகை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story