பாசஞ்சர் ரெயில்களை இயக்குவது எப்போது? மதுரை கோட்ட மேலாளர் பேட்டி


பாசஞ்சர் ரெயில்களை இயக்குவது எப்போது? மதுரை கோட்ட மேலாளர் பேட்டி
x
தினத்தந்தி 21 Sept 2021 8:12 PM IST (Updated: 21 Sept 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் அரசு அனுமதி கிடைத்ததும் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் கூறினார்.

திண்டுக்கல்:
கொரோனா பரவலால் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயில்கள் அரசு அனுமதி கிடைத்ததும் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் கூறினார். 
கோட்ட மேலாளர் ஆய்வு 
மதுரை ரெயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் ஆனந்த் நேற்று, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். இதற்காக சிறப்பு ரெயில் மூலம் அவர் மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு வந்தார். பின்னர் திண்டுக்கல் ரெயில் நிலையம் முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். 
அப்போது அனைத்து நடைமேடைகள், சுரங்கப்பாதை, பார்சல் பிரிவு, டிக்கெட் வழங்கும் இடம், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம், குட்ஷெட் பகுதி உள்பட அனைத்தையும் பார்வையிட்டார். அப்போது பயணிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
தேசியக்கொடி எங்கே?
மேலும் கொரோனா காலமாக இருப்பதால் ரெயில் நிலையம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதேபோல் பயணிகள் காத்திருக்கும் அறைகளில் உள்ள கழிப்பறைகள், நடைமேடைகளில் இருக்கும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 
இதற்கிடையே ரெயில் நிலையத்தின் முன்புள்ள பிரமாண்ட கொடிக்கம்பம் தேசியக்கொடி இல்லாமல் காட்சி அளித்தது. அதை பார்த்த கோட்ட மேலாளர், தேசியக்கொடியை ஏன் ஏற்றவில்லை என்று அதிகாரிகளிடம் கேட்டார். அப்போது பலத்த காற்று வீசியதால் தேசியக்கொடி சேதம் அடைந்து விட்டதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் தேசியக்கொடி சேதம் அடையாமல் பறப்பதற்கு உரிய ஏற்பாடு செய்யும்படி அவர் அறிவுறுத்தினார். 
பாசஞ்சர் ரெயில் சேவை 
இதைத் தொடர்ந்து கோட்ட மேலாளர் ஆனந்த் நிருபர்களிடம் கூறுகையில், ரெயில் பயணிகளுக்காக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா பரவலால் பாசஞ்சர் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அரசு அனுமதி அளித்ததும் மீண்டும் அவை இயக்கப்படும். அதேபோல் புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்து இருக்கிறோம், என்றார். 
இதேபோல் கொடைரோடு, அம்பாத்துரை, அய்யலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் கோட்ட மேலாளர் ஆனந்த் ஆய்வு செய்தார். மேலும் கொடைரோடு அருகே மலைப்பகுதியில் அமைந்துள்ள ரெயில் பாதையை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது திண்டுக்கல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Next Story