15 வயது சிறுமி பிரசவத்துக்காக அனுமதி
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இளம்வயது திருமணம் காரணமாக 15 வயது சிறுமி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டிப்பட்டி:
15 வயது சிறுமி
பெண்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் சட்டத்தை மீறி, இளம் வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் இளம் வயது திருமணம் அதிகரித்து காணப்படுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இளம்வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வரும் நிலையிலும், யாருக்கும் தெரியாமல் குழந்தை திருமணங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. அதிலும், கொரோனா ஊரடங்கு காலத்தின்போது இளம்வயது திருமணங்கள் தேனி மாவட்டத்தில் அதிகரித்து இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதனை நிரூபிக்கும் வகையில், 18 வயது நிரம்பாத இளம்பெண்கள் பிரசவத்துக்காக மாதத்துக்கு 2 அல்லது 3 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்றனர்.
அதன்படி இளம்வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமி, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவர், பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமிக்கு 15 வயது தான் ஆகிறது. ஆனால் அதற்குள் சிறுமிக்கு உறவினர்கள் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
போலீசார் விசாரணை
பொதுவாக சிறுமிகள் பிரசவத்திற்காக அனுமதிக்கும் போது மருத்துவமனை சார்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது அந்த சிறுமி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து க.விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது, 14 வயதில் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த நபர்கள் மற்றும் சிறுமியை திருமணம் செய்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக, அரசு என்னதான் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டாலும், தேனி மாவட்டத்தில் இளம் வயது திருமணங்கள் அதிகரித்து கொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
அறியாத வயதில் புரியாத புதிராய் தோன்றும் திருமணங்கள், பிஞ்சு நெஞ்சங்களை உயிரோடு புதைகுழியில் தள்ளுவதற்கு சமமானது என்று எப்போது பெற்றோர்கள் நினைக்கிறார்களோ, அன்றைக்கு தான் இளம்வயது திருமணங்களை தடுக்க முடியும் என்பதில் அய்யமில்லை.
Related Tags :
Next Story