ரேஷன்கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேனியில் உள்ள ரேஷன்கடைகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் உள்ள சில ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். ரேஷன் பொருட்களின் இருப்பு விவரம், விற்பனை முனைய கருவிகளின் பயன்பாடு குறித்தும், கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? எனவும் அவர் ஆய்வு செய்தார். ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்களிடம் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என அவர் கேட்டறிந்தார். முக கவசம் அணிந்து வரும் மக்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதேபோல், தேனி தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்கு அலுவலக பணியாளர்கள் வருகைப்பதிவேடு, பொதுமக்களின் மனுக்கள் குறித்த பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மனு அளிக்க வந்த மக்களிடம் மனுக்களை பெற்று கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், பெரியகுளம் சப்&கலெக்டர் ரிஷப், தேனி தாசில்தார் சரவணபாபு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடந்தது.
மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் தொடர்பான ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார். கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story