கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை


கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம்  விசாரணை
x
தினத்தந்தி 21 Sept 2021 8:44 PM IST (Updated: 21 Sept 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை

கோத்தகிரி

கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு கொலை, கொள்ளை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24&ந் தேதி காவலாளி ஓம்பகதூர் படுகொலை செய்யப்பட்டார். 

மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ஜாமீனில் உள்ளவர்கள், விடுபட்ட சாட்சிகள் உள்பட பலரிடம் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாதது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலை

இதற்கிடையே கோடநாடு எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் கடந்த 2017&ம் ஆண்டு ஜூலை மாதம் 3&ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவர், கண்பார்வை மங்கியதால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அது தற்கொலை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் தினேஷ்குமார் தற்கொலை தொடர்பாக மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டனர். இது சம்பந்தமாக கோத்தகிரி தாசில்தாரிடம் நேற்று முன்தினம் காலை கோத்தகிரி இன்ஸ்பெக்டர் மனு அளித்தார்.


இதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கோடநாடு எஸ்டேட் அலுவலகத்திற்கு சென்று தினேஷ்குமாருடன் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

 பின்னர் கெங்கரை கிராமத்தில் உள்ள தினேஷ்குமாரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்கள், தினேஷ் குமாரின் தந்தை போஜனிடம் 3 மணி நேரம் ரகசிய விசாரணை நடத்தினர்.

குடும்பத்தினரிடம் விசாரணை

இதைத்தொடர்ந்து நேற்று காலை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் போலீசார் கெங்கரை கிராமத்தில் உள்ள தினேஷ்குமார் வீட்டிற்கு சென்றனர். 

அங்குள்ள இட்டக்கல் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றும் தினேஷ்குமாரின் தங்கை ராதிகா, மற்றும் அவரது தாய் கண்ணகி ஆகியோரிடம் நேற்று 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தினேஷ் குமாரின் தந்தை போஜனும் உடன் இருந்தார்.

கடந்த 2 நாட்களாக தினேஷ்குமார் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தந்தை போஜன் பரபரப்பு பேட்டி

போலீசாரின் விசாரணையை தொடர்ந்து தினேஷ்குமாரின் தந்தை போஜன் நிருபர்களிடம் கூறியதாவது

தினேஷ்குமார் தற்கொலை செய்த நாளில் நான் அருகில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்த இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டேன். அப்போது எனது மகன் வீட்டில் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். 

உடனே நான் அங்கிருந்து வீட்டிற்கு வருவதற்குள், மருத்துவமனைக்கு எனது மகனை கொண்டு சென்றுவிட்டனர். அதை தான் போலீசாரிடம் தெரிவித்தேன். நான் அன்று என்ன தெரிவித்தேனோ அதையே தான் இன்றும் தெரிவித்தேன். யாரிடம் இருந்தும் அவருக்கு மிரட்டலோ அல்லது எந்தவித அழுத்தமோ இல்லை. 

கோடநாடு எஸ்டேட்டில் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை. அவருக்கு என்ன மன உளைச்சல் இருந்தது என்று எனக்கு தெரியாது. எப்போதும் இருப்பதுபோல்தான் இருந்தார். 

திடீரென எதற்கு தற்கொலை செய்தார் என தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது உங்களது கையெழுத்து தானா? என விசாரித்தனர்.

 எழுதிக் கொடுத்தார்கள், நான் கையெழுத்து போட்டேன் என்றேன். என்னிடம் 3 மணி நேரமும், இன்று (நேற்று) என் மனைவி மற்றும் மகளிடம் 3 மணிநேரமும் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். மறுபடியும் யார் வந்து விசாரித்தாலும் இதையே தான் சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story