நிலக்கோட்டை அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை
நிலக்கோட்டை அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43). இவர் கடந்த 2009&ம் ஆண்டு தனது நிலத்துக்கு பட்டா கேட்டு, நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்றும், முதல் தவணையாக ரூ.6 ஆயிரம் தரும்படியும் சதீஷ்குமாரிடம், அப்போதைய விருவீடு நிலஅளவையர் ராமராஜ் (65) தெரிவித்தார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நிலஅளவையர் ராமராஜிடம், சதீஷ்குமார் கொடுத்தார். அப்போது ராமராஜை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார். இதில் குற்றம்சாட்டப்பட்ட நிலஅளவையர் ராமராஜூக்கு லஞ்சம் கேட்டல், லஞ்சம் வாங்குதல் ஆகிய 2 குற்றங்களுக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story