கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின்போது 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி - அதிகாரியை தாக்கிய பெண் கைது


கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின்போது 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி - அதிகாரியை தாக்கிய பெண் கைது
x
தினத்தந்தி 21 Sept 2021 9:47 PM IST (Updated: 21 Sept 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். அதிகாரியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ளது பெத்திக்குப்பம் ஊராட்சி. இங்கு உள்ள பெத்திக்குப்பம் காலனி பகுதியில் சுடுகாடு மற்றும் கோவில் பயன்பாட்டிற்கான சாலையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் தலைமையில் நேற்று தனியார் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை கண்டித்து பெண்கள் சிலர் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அம்மு (வயது 38), மணியம்மாள் (58) ஆகியோர் தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பெண் போலீசார் தடுத்து அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், கிராம உதவியாளர் திருப்பதி (54) என்பவரை நாகஜோதி (29) என்ற பெண் தாக்கியதுடன், வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக நாகஜோதியை போலீசார் கைது செய்தனர்.

Next Story