ரூ.2 கோடியில் முருங்கை சிறப்பு மையம்


ரூ.2 கோடியில் முருங்கை சிறப்பு மையம்
x
தினத்தந்தி 21 Sept 2021 10:32 PM IST (Updated: 21 Sept 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் ரூ.2 கோடி மதிப்பில் 15 ஏக்கர் பரப்பளவில் முருங்கை சிறப்பு மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தேனி:

ரூ.2 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி மற்றும் கடமலை&மயிலை ஒன்றிய பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிக அளவில் நடக்கிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் முருங்கைக்காய் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. 

மேலும், முருங்கை இலைகளை பொடியாக்கி ஆஸ்திரேலியா, சீனா போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் விளைச்சல் அதிகரிக்கும் நேரங்களில் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முருங்கை விவசாயிகளை பாதுகாக்க தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. 

இதைக்கருத்தில் கொண்டு ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில், முருங்கை சிறப்பு மையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக, தேக்கம்பட்டியில் சமத்துவபுரம் மற்றும் மாவட்ட சிறைச்சாலை அருகே 15 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. 

இங்கு முருங்கை சிறப்பு மையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகின்றன.

முருங்கை ஆராய்ச்சி

 இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பாண்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
முருங்கை சாகுபடியை மேம்படுத்தும் வகையில் முருங்கை சிறப்பு மையம் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 1950&ம் ஆண்டு கால கட்டத்தில் முதல் முறையாக தோட்டக்கலை பண்ணைகள் அமைக்கப்பட்டன. 

அப்போது பெரியகுளம், கன்னியாகுமரி, தருமபுரி, விருதுநகர் ஆகிய 4 பகுதிகளில் முதற்கட்டமாக தோட்டக்கலை பண்ணைகள் அமைக்கப்பட்டன. அதன்பிறகு தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை பண்ணை எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது.

 அந்த ஏக்கத்தை தணிக்கும் வகையில், தற்போது முருங்கை சிறப்பு மையம் மற்றும் பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது.

இங்கு முருங்கை ஆராய்ச்சி, முருங்கை நாற்றுகள் உற்பத்தி, முருங்கை இலை, விதைகள், முருங்கைக்காய் போன்றவற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

ஒரு ஆண்டில் கட்டுமான பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். விவசாயிகள் முருங்கை இலை, முருங்கைக்காய்களை இந்த மையத்தின் வழிகாட்டுதலின்பேரில் நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். 

இந்த மையத்திலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அவை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யப்படும். இங்கு முருங்கை நாற்றுகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story