கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நில எடுப்பு பணி தீவிரம்


கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நில எடுப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Sept 2021 10:59 PM IST (Updated: 21 Sept 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நில எடுப்பு பணி தீவிரம்

கோவை

கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் மேற்கு புறவழிச்சாலை திட்டத்துக்கு நில எடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேற்கு புறவழிச்சாலை

கோவையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். 

இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலக்காடு சாலையில் இருந்து மாநகர பகுதிக்குள் நுழையாமல் நரசிம்மநாயக்கன் பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைய மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த புறவழிச்சாலை சுகுணாபுரத்தில் தொடங்கி மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிப்பாளையம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி, பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம் வழியாக மொத்தம் 32.43 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. 

இதற்கான நில எடுப்பு மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ரூ.320 கோடி ஒதுக்கீடு

மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த 122.49 எக்டேர் தனியார் நிலமும், 20.51 எக்டேர் அரசு நிலமும் ஆக மொத்தம் 143 எக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ரூ.1700 கோடி திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

மதுக்கரை, சுண்டக்காமுத்தூரர், பேரூர், செட்டிப்பாளையம், தீத்திப்பாளையம், மாதம்பட்டி உள்பட 5 வருவாய் கிராமங்களில் நிலம் எடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 

இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து உள்ளது. மற்றபகுதிகளிலும் படிப்படியாக நடைபெற்று வருகிறது. இந்ததிட்டத்தில் முதல் கட்டமாக சுகுணாபுரத்தில் இருந்து மாதம்பட்டிவரை 12 கி.மீ. தூரத்துக்கு விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story