கன்டெய்னர் லாரி மோதியதில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது
கன்டெய்னர் லாரி மோதியதில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது
கோவை
கோவையில் கன்டெய்னர் லாரி மோதியதில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் டிரைவர் உயிர் தப்பினார்.
கார் மீது மரம் விழுந்தது
கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் அருகே சீராபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35), கால் டாக்சி டிரைவர். இவர் வாடிக்கையாளரை காரில் ஏற்றி கோவை ரெயில் நிலையம் வந்தார்.
பின்னர் அவரை அங்கு இறக்கி விட்டு கணபதியை நோக்கி சென்றார்.
அப்போது அவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் சென்றபோது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி சாலையோரம் நின்றிருந்த மரத்தின் மீது மோதியது. இதில் மரம் முறிந்து பின்னால் வெங்கடேஷ் ஓட்டி வந்த கார் மீது விழுந்தது.
வெட்டி அகற்றம்
அதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்ததுடன் கண்ணாடியும் உடைந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து காருக்குள் சிக்கிய வெங்கடேசை மீட்டனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் காரின் மீது விழுந்து கிடந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர். மேலும் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கன்டெய்னர் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story