விழுப்புரம் பகுதியில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழை
விழுப்புரம் பகுதியில் இடி& மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
விழுப்புரம்,
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரத்திலும் கடந்த சில வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு வேளைகளில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடனும், இடி& மின்னலுடனும் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு கனமழை ஓய்ந்த நிலையில் காலை 6 மணி வரை அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.
சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
பலத்த மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. இதனால் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் அதன் நுழைவுவாயிலில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச்சென்றன. மழை ஓய்ந்ததும் நேற்று காலை, பஸ் நிலையத்தில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்தது.
இதேபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தனியார் பள்ளி வாகனம் ஒன்று, மாணவர்களை ஏற்றிக்கொண்டு கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் வரும்போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் அந்த வாகனம் சிக்கிக்கொண்டது.
உடனே வாகன டிரைவர் கீழே இறங்கி, அந்த மாணவர்களை பாதுகாப்புடன் வாகனத்தில் இருந்து கீழே இறக்கி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் விழுப்புரம் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், வளவனூர், காணை, நன்னாடு, தோகைப்பாடி, சிந்தாமணி, அய்யூர்அகரம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மற்றும் மணம்பூண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், திருவெண்ணெய்நல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் இடி& மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை
இதேபோல் திருக்கோவிலூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த சூறை காற்றுடன் தொடங்கிய மழையானது நேற்று அதிகாலை 4 மணி வரை கனமழையாக கொட்டியது. இதனால் நகர சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
மேலும் பலத்த காற்றின்போது ஓரிரு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் சற்று அவதிடையந்தனர். இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் காற்றினால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைத்தனர். அதன்பிறகு மதியம் 1 மணி முதல் மின்வினியோகம் செய்யப்பட்டது.
இதேபோல் உளுந்தூர்பேட்டை பகுதியிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story