முன்னாள் ராணுவ வீரர் மனைவியின் பண்ணை வீட்டை அபகரித்ததாக புகார்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் பண்ணை வீட்டை அபகரித்ததாக திருமருகல் ஒன்றியக்குழு துணை தலைவர் உள்பட 6 பேர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.
திட்டச்சேரி:
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியின் பண்ணை வீட்டை அபகரித்ததாக திருமருகல் ஒன்றியக்குழு துணை தலைவர் உள்பட 6 பேர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.
ராணுவ வீரர் மனைவி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அம்பல் கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற இவர், அந்த நாட்டு ராணுவத்தில் பணி புரிந்து வீரமரணம் அடைந்தார். இவருடைய மனைவி ராணி(வயது 72).
இவர், பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதால் அம்பல் கிராமத்தில் உள்ள தன்னுடைய பண்ணை வீட்டில் கணவர் சிவானந்ததுக்கு நினைவிடம் கட்டி உள்ளார். இங்கு ஆண்டுதோறும் அவர் வந்து தனது கணவருக்கு திதி கொடுத்து செல்வது வழக்கம்.
பண்ணை வீட்டை அபகரித்ததாக புகார்
இந்த நிலையில் அம்பலில் உள்ள தனது பண்ணை வீடு, தோட்டம் மற்றும் ரூ.11 லட்சம், 22 பவுன் நகைகள், 2 கார் ஆகியவற்றை தன்னை ஏமாற்றி கொங்கராயநல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியன், அவரது தந்தை ராஜேந்திரன், தாயார் பார்வதி, சகோதரர் ஜெயராஜ், மனைவி ரேவதி மற்றும் திருமருகல் ஒன்றியக்குழு துணை தலைவர் திருமேனி ஆகிய 6 பேர் அபகரித்து விட்டதாக ராணி, திருகண்ணபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:&
நான் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்ததால் அம்பல் கிராமத்தில் உள்ள எனது பண்ணை வீடு மற்றும் தோட்டத்தை கவனித்துக்கொள்ள கொங்கராயநல்லூர் பகுதியை சேர்ந்த சத்தியன் என்பவரை வேலைக்கு வைத்திருந்தேன். அவர் கடந்த 2016&ம் ஆண்டு முதல் பண்ணை வீட்டையும், தோட்டத்தையும் கவனித்து வந்தார்.
22 பவுன் நகை-கார்கள் திருட்டு
எனது சொத்துக்களை அபகரிக்க திட்டம் தீட்டிய சத்தியன், எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்னை உள்ளூரை சேர்ந்த ஒரு மந்திரவாதியிடம் அழைத்துச் சென்று மூளைச்சலவை செய்து எனது சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதனை தொடர்ந்து சத்தியனை முழுவதுமாக நம்பி பண்ணை வீடு மற்றும் தோட்டத்தை பராமரிக்க கூறி விட்டு நான் பிரான்சுக்கு சென்று விட்டேன். பின்னர் பிரான்சில் கொரோனா ஊரடங்கு முடிவடைந்ததை தொடர்ந்து நான் அம்பல் கிராமத்தில் உள்ள எனது பண்ணை வீட்டுக்கு வந்தேன். அப்போது அங்கு சத்தியன் தனது குடும்பத்தோடு இருந்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இது தன்னுடைய வீடு என்றும், நீங்கள் உடனடியாக வீட்டை விட்டு பிரான்ஸ் நாட்டுக்கு செல்லுங்கள் என்றும் என்னை மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். இதனால் சத்தியன் தனது அடியாட்கள் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வீட்டை அடித்து உடைத்து அங்கிருந்த 2 சொகுசு கார்களையும் திருடிச்சென்று விட்டார். மேலும் 22 பவுன் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் திருடிச்சென்று விட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
6 பேர் மீது வழக்கு
இந்த புகாரின் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார், ராணியின் சொத்தை அபகரித்தாக சத்தியன் மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், தாயார் பார்வதி, மனைவி ரேவதி, சகோதரர் ஜெயராஜ் மற்றும் திருமருகல் ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமேனி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்து சத்தியன் உள்பட 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 6 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
சத்தியன் தலைமையிலான கும்பல் ராணியின் வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபடும் காட்சிகளும், இரண்டு கார்களை திருடி செல்லும் காட்சிகளும், ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமேனி, ராணியிடம் பேசும் செல்போன் உரையாடல்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரான்ஸ் ராணுவத்தில் பணிபுரிந்து செவாலியர் விருது பெற்ற வீரரின் மனைவியின் பண்ணை வீடு மற்றும் தோட்டத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story