மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் தரம் குறைந்த நகைகளுக்கு அதிக பணம்; ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்


மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் தரம் குறைந்த நகைகளுக்கு அதிக பணம்; ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 21 Sept 2021 11:38 PM IST (Updated: 21 Sept 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரம் கூட்டுறவு வங்கியில் தரம் குறைந்த நகைகளுக்கு அதிக பணம் வழங்கியதாக ஊழியர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்து துணை பதிவாளர் உத்தரவிட்டார்.

எலச்சிபாளையம்:
போலி நகைகள் அடமானம்
 சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 5 பவுனுக்கு கீழ் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து பெறப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றனர். இதில் சிலர் போலி நகைகளையும், தரம் குறைந்த நகைகளையும் அடமானம் வைத்து கடன் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் சிலர் தரம் குறைந்த நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாக புகார் எழுந்தது. மேலும் இந்த நகைகளை ஆய்வு செய்யாமல் ஊழியர்கள் 22 கேரட் நகைகளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை, அதை விட குறைந்த தரம் கொண்ட நகைகளுக்கு வழங்கியுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி ரூ.15 லட்சம் வரை மோசடி நடந்ததாக புகார் கொடுக்கப்பட்டது.
பணியிடைநீக்கம்
இந்த புகாரின்பேரில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது 14 கணக்குகளில் தரம் குறைந்த நகைகள் அடகு வைக்கப்பட்டதும், அதற்கு 22 கேரட் நகைகளுக்கு வழங்கப்படும் பணம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த மோசடியில் வங்கி ஊழியர்களான சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகியோர் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த ஆய்வு அறிக்கை கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தரம் குறைந்த நகைகளுக்கு அதிக பணம் வழங்கியதாக வங்கி ஊழியர்கள் சலோன்மணி, சிவலிங்கம், சுந்தரராஜ் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story