தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
கால்வாயில் கழிவுகள் அகற்றப்பட்டது
மறவன்குடியிருப்பை அடுத்த வண்ணான்விளை பகுதி வழியாக செல்லும் அனந்தன்கால்வாயில் மர்ம நபர்கள் குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் கழிவுகள் தேங்கி நின்று தண்ணீர் மாசு அடைந்து தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை பலகை தேவை
மருங்கூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே சாலை மிகவும் குறுகலாகவும், வளைந்தும் காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் செல்கின்றன. குறுகிய வளைவு வழியாக மிகவும் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ‘குறுகிய வளைவு எச்சரிக்கை’ என அறிவிப்பு பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாராயணன், மருங்கூர்.
சாலையோரம் நிற்கும் பட்ட மரம்
பார்வதிபுரம் அருகே உள்ள கிறிஸ்டோபர் காலனி பகுதியில் சாலையோரம் ஒரு மரம் பட்ட நிலையில் நிற்கிறது. பலத்த காற்று வீசும் போது மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன. மரம் முழுமையாக முறிந்து விழும்போது பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருமைநாயகம், கிறிஸ்டோபர் காலனி.
சாலையில் தேங்கும் மழைநீர்
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட விழுந்தயம்பலம் அருகே உள்ள தேமான்விளையில் சாலையில் உள்ள பள்ளத்தில் பல நாட்களாக மழைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், இந்த தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துக்கள் உலாவி வருகின்றன. இதனால், அந்த பகுதியை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்து மழைநீர் தேங்காதவாறு வடிகால் ஓடை அமைக்க வேண்டும்.
-சுபின், விழுந்தயம்பலம்.
பஸ்சை முறையாக இயக்க வேண்டும்
நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம்துறைக்கு தடம் எண் 39ஏ.வி. பஸ் கடந்த பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் முறையாக இயக்கப்படாமல் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பஸ்சை முறையாக இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், அளத்தங்கரை.
சாலையில் பள்ளம்
கோட்டார் சாலையில் இருந்து ரெயில்வே சாலைக்கு திரும்பும் பகுதியில் சுமார் 10 அடி சுற்றளவு சாலை உடைந்து பள்ளமாக உள்ளது. அந்த வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், சிறிய வாகனங்கள் செல்கின்றன. சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெரால்ட், நாகர்கோவில்.
சுகாதார சீர்கேடு
சுசீந்திரம், தெற்கு மண், பார்கவி நகரில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், சுசீந்திரம்.
Related Tags :
Next Story