வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்


வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 7:57 PM GMT (Updated: 21 Sep 2021 7:57 PM GMT)

அருப்புக்கோட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 
சந்தன மாரியம்மன் கோவில் 
அருப்புக்கோட்டை மணி நகரம் பகுதியில் 500&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள உச்சிசெட்டியார்தெருவில் தனியார் சமுதாயத்தினர் சார்பில் சந்தனமாரியம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு தற்போது அனைத்து சமுதாயத்தினரிடமும் இருந்து நன்கொடை பெற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. 
அனைத்து சமுதாய மக்களும் இந்த கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். இந்தநிலையில் தனிநபர் ஒருவர் இந்த கோவிலை இடிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கோவிலை இடிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என கூறப்படுகிறது. 
சாலை மறியல் 
இந்தநிலையில் கோவிலை இடிக்க கோரி வழக்கு தொடர்ந்த தனிநபரை கண்டித்தும் மணி நகரம் பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் 300&க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதில் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களும் போராடும் மக்களுக்கு ஆதரவாக தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:& 
எங்கள் பகுதியில் 40 ஆண்டு காலமாக உள்ள சந்தன மாரியம்மன் கோவிலால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. மக்கள் ஒற்றுமையாக இருக்கும்போது தனிநபர் எங்களுடைய ஒற்றுமையை குலைத்து சட்டம்&ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளார். எங்களுக்கு இந்த கோவில் வேண்டும் எனவும் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி உள்ளோம் என கூறினர். 
பின்னர் அவர்கள் திடீரென மதுரை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story