2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை முயற்சி
கொடுத்த ரூ.10 லட்சம் திரும்ப கிடைக்காததால் விரக்தி அடைந்த தம்பதி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தளவாய்புரம்,
கொடுத்த ரூ.10 லட்சம் திரும்ப கிடைக்காததால் விரக்தி அடைந்த தம்பதி, தன்னுடைய 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜவுளி வியாபாரம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் அருகே மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர், குமார் (வயது 36). இவருக்கு தேவி (33) என்ற மனைவியும், குருதர்ஷினி (9), தேவதர்ஷினி (1) ஆகிய 2 குழந்தைகளும் உள்ளனர்.
குமார் தனது குடும்பத்துடன் கேரளாவில் ரூ.10 லட்சத்திற்கு ஒத்திக்கு வீடு பார்த்து தங்கி இருந்து ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் அவர் தனது சொந்த ஊரில் வியாபாரம் செய்யப்போவதாக கூறி தங்கி இருந்த வீட்டு உரிமையாளரிடம் ஒத்தி ரூபாயை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு குமார் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்துக்கு வந்தார்.
தற்கொலை முயற்சி
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரும், அவருடைய மனைவியும் ஒத்தி பணம் ரூ.10 லட்சம் தங்களுக்கு கிடைக்காத வருத்தத்தில் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) அவர்கள் இருவரும் குடித்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொடுத்தனர்.
குமார் குடும்பத்தினர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று அதிகாலை கவனித்தனர். உடனடியாக சேத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story