இளம்பெண்ணை சிறை வைத்து வீட்டுக்கு பூட்டு


இளம்பெண்ணை சிறை வைத்து வீட்டுக்கு பூட்டு
x
தினத்தந்தி 22 Sept 2021 2:15 AM IST (Updated: 22 Sept 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் இளம்பெண்ணை சிறைவைத்து வீட்டை பூட்டிய தி.மு.க. பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 60). இவர், எம்.புதூர் கிராமத்தில் இருந்த தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.43 லட்சத்திற்கு தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விற்பனை செய்தார். இதில் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு 9 மணி அளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சுப்பிரமணியனின் மகள் தேவி(25) மட்டும் இருந்தார். உடனே அந்த தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டின் வெளிப்புற கேட்டை இழுத்து மூடி, பூட்டு போட்டு பூட்டிவிட்டு சென்றனர். 
இளம்பெண்ணை சிறைவைத்து வீட்டுக்கு பூட்டுப்போட்ட சம்பவம் பற்றி அறிந்ததும் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கேட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று இளம்பெண்ணை மீட்டனர். 
இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. பிரமுகரிடம் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story