பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து கைதான ராஜஸ்தான் வாலிபர் தங்கியிருந்த வீட்டில் சோதனை


பாகிஸ்தானுக்காக உளவு பார்த்து கைதான ராஜஸ்தான் வாலிபர் தங்கியிருந்த வீட்டில் சோதனை
x
தினத்தந்தி 22 Sept 2021 2:50 AM IST (Updated: 22 Sept 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தான் உளவுபிரிவுடன் தொடர்பில் இருந்ததாக கைதான ராஜஸ்தான் வாலிபரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

பெங்களூரு: பாகிஸ்தான் உளவுபிரிவுடன் தொடர்பில் இருந்ததாக கைதான ராஜஸ்தான் வாலிபரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

தீவிர விசாரணை

இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட ரகசிய தகவல்களையும், சில புகைப்படங்களையும் பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள உளவு பிரிவு (ஐ.எஸ்.ஐ.) அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்ததாக, பெங்களூரு காட்டன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜாலிமொகல்லா பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்தர்சிங் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 12 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு ஆடுகோடியில் உள்ள தடய அறிவியல் மையத்தில் வைத்து ஜிதேந்தர்சிங்கிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கராச்சியில் உள்ள உளவு பிரிவு அதிகாரிகளின் நம்பர் கிடைத்தது எப்படி? அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்று கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீட்டில் சோதனை

இதற்கிடையே முகநூல் மூலமாக பழகிய ஒரு பெண் கூறியதால் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் ஜிதேந்தர்சிங் கூறி இருந்தார். இதனால் அந்த பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு ஜிதேந்திரசிங் புகைப்படங்கள், ராணுவம் சம்பந்தப்பட்ட விவரங்களை அனுப்பி வைத்து உள்ளார். 

அந்த செல்போன் நம்பரை பூஜாஜி என்று அவர் தனது செல்போனில் பதிவு செய்து இருந்து உள்ளார். மேலும் தகவல்களை அனுப்பியதுடன், அந்த தகவல்களை அவர் செல்போனில் இருந்து அழித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜிதேந்தர்சிங்கின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் யார், யாரிடம் பேசினார் என்றும், அவர் அழித்த தகவல்களை திரும்ப எடுக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் பாகிஸ்தானிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு தகவல்களை அனுப்பி வைத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜாலிமொகல்லாவில் ஜிதேந்தர்சிங் தங்கி இருந்த வீட்டில் நேற்று காட்டன்பேட்டை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்து ராணுவ வீரர் சீருடை, சிம்கார்டுகள் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story