3 மாத பெண் குழந்தையை விற்றதாக தம்பதி மீது வழக்கு
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு விற்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
4-வது பெண் குழந்தை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 34). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மீனா(27). இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மீனாவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நான்காவதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டுள்ளனர்.
தம்பதியிடம் விசாரணை
இந்நிலையில் சரவணன்-மீனா தம்பதியினர் அந்த பெண் குழந்தையை, ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்று விட்டதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று அவர் விசாரணை நடத்தினார். இதில் குழந்தை விற்கப்பட்டது உறுதியானதை தொடர்ந்து, இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து சரவணன், மீனா ஆகியோரிடம் குழந்தையை யாரிடம் விற்றார்கள்? எதற்காக விற்றார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் குழந்தையை தாய், தந்தையே விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story