ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை - வெள்ளிப்பொருட்கள் திருட்டு


ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை - வெள்ளிப்பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 Sept 2021 3:02 AM IST (Updated: 22 Sept 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

ஜெயங்கொண்டம்:

ராணுவ வீரர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் கபிலன்(வயது 42). ராணுவ வீரரான இவர் பஞ்சாப் மாநிலத்தில் பணியில் உள்ளார். இவரது மனைவி தமிழ்செல்வி(38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தமிழ்செல்வி, குழந்தைகளுடன் ஜோதிபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தமிழ்செல்வி வீட்டை பூட்டிவிட்டு தா.பழூர் அருகே கோட்டியால் கிராமத்தில் உள்ள தனது சகோதரர் தணிகாசலம் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது பற்றி தமிழ்செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் கலைக்கப்பட்டு கிடந்தன. இதையடுத்து பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது பற்றி நேற்று ஜெயங்கொண்டம் போலீசில் அவர் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அரியலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் ‘டிக்சி‘ வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக ஓடிய மோப்ப நாய் திருச்சி & சிதம்பரம் சாலையில் சென்று படுத்துக்கொண்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
மேலும் கைரேகை நிபுணர் துர்க்காதேவி தலைமையில் வந்த நிபுணர்கள், வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊறுகாயுடன் மது அருந்திய மர்மநபர்கள்
ராணுவ வீரர் கபிலன் வீட்டில் ஆள் இல்லாமல் பூட்டிக்கிடந்ததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள், அந்த வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடியுள்ளனர். மேலும் வீட்டில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா? என்று அவர்கள் தேடியபோது குளிர்சாதன பெட்டியில் ஊறுகாய் இருப்பதை கண்டு, அதனை வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து அந்த ஊறுகாயுடன், வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். பின்னர் திருடிய பொருட்களுடன் சாவகாசமாக வீட்டின் பின்பக்க கதவை திறந்து தப்பிச்சென்றுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



Next Story