'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Sep 2021 10:00 PM GMT (Updated: 21 Sep 2021 10:00 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற `வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற `வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவில் டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்த நிலையில் இருந்தது. இதுபற்றி `புகார் பெட்டி' பகுதியில் `ஆபத்தான மின்கம்பம்' என்ற தலைப்பில் வாசகர் மோகனசுந்தரம் அனுப்பிய பதிவு கடந்த 19&ந் தேதி செய்தியாக வெளியானது. அந்த புகார் மீது மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சீரமைத்தனர். துருப்பிடித்த நிலையில் இருந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் வெல்டிங் வைத்து சிமெண்டு கலவை போட்டு புதிய மின் விளக்கு நேற்று பொருத்தப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் அவர் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

தெருவிளக்குகள் எரியுமா?

நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டி அருகில் சிவராஜபுரம் மெயின்ரோட்டில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் தண்ணீர் வரவில்லை. மேலும் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- இளவரசி, சிவராஜபுரம்.
.
சேறும், சகதியுமான மாற்றுப்பாதை

நாங்குநேரி தாலுகா கூந்தன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூந்தன்குளம்&பொத்தையடி செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதற்கு மாற்றுப்பாதை சரியாக அமைக்கவில்லை. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மாற்றுப்பாதை சேறும், சகதியுமாக உள்ளது. அதில் பயணம் செய்பவர்கள் பலர் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமின்றி செல்ல அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிக்சன், மாங்குளம்.

அரசு மருத்துவமனை அமையுமா?

நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில் காவல்கிணறு விலக்கு உள்ளது. இந்த பஞ்சாயத்து பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால், காவல்கிணறு விலக்கில் அரசு மருத்துவமனையும், பொது கழிவறை வசதியும் இல்லை. இதனால் நோயாளிகள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கோ அல்லது நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கோ செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. எனவே, அரசு மருத்துவமனையும், கழிவறை வசதியும் அமைக்க வேண்டுகிறேன்.
- ஜெயபால், காவல்கிணறு.

மூடிக்கிடக்கும் நூலகம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் குலசேகரப்பட்டி கிராமத்தில் அண்ணா நூலகம் சுமார் 3 ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அந்த நூலகம் பகுதி நேரமாக மட்டுமே முன்பு இயங்கியது. அப்போது மாணவ, மாணவிகள், போட்டி தேர்வுக்கு தயாரானவர்கள், பொதுமக்கள் வந்து நாளிதழ் மற்றும் தங்களுக்கு தேவையான புத்தகங்களை படித்து சென்றனர். தற்போது மூடிக்கிடப்பதால் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு அந்த வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் அண்ணா நூலகத்தை திறந்து முழு நேரமாக இயங்கச்செய்தால் அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள்.
- இசக்கித்துரை, குலசேகரப்பட்டி.

கூடுதல் ரேஷன் கடை வேண்டும்

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியில் ஒரு ரேஷன் கடை தான் இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகிறார்கள். அனைவரும் ஒரே கடையில் பொருட்கள் வாங்க செல்வதால் வயதான முதியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்படுகிறார்கள். மேலும், இந்த கடையில் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க அங்கு கூடுதலாக ஒரு ரேஷன் கடை திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
- பக்கீர் மைதீன், முதலியார்பட்டி.

இருவழிப்பாதை அமையுமா?

நெல்லை முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் திருச்செந்தூர் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் செய்துங்கநல்லூர் முதல் சத்திரம் வரையிலான சாலை தற்போது மூடப்பட்டு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செய்துங்கநல்லூரில் இருந்து அனவரதநல்லூர், வசவப்பபுரம் சாலையில் செல்கின்றன. இந்த சாலையானது ஒருவழிப்பாதையாக உள்ளதால் பஸ் மற்றும் கனரக வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகி செல்ல முடியாமல் பரிதவிக்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அவசரமாக வெளியூர் செல்பவர்களும், அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ்களும் உடனே செல்ல முடியாமல் தவிக்கின்றன. எனவே, இந்த ஒரு வழிப்பாதையை சற்று அகலப்படுத்தி இருவழிப்பாதையாக மாற்றினால் வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வார்கள். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- கணேசன், வசவப்பபுரம்.

எப்போது விழுமோ பயணிகள் நிழற்கூடம்

திருச்செந்தூர் வட்டாரத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்டது நாலாயிரமுடையார் குளம் (நத்தக்குளம்). இந்த பஸ் நிறுத்தத்தில் பழமையான பயணிகள் நிழற்கூடம் உள்ளது. தற்போது அது பழுதடைந்து விட்டது. இப்ப விழுமோ, எப்போது விழுமோ என்ற நிலையில் இருப்பதால் அதன் அருகில் செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். எனவே, உடைந்து விழும் நிலையில் இருக்கும் பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- சிவானந்தம், நாலாயிரமுடையார் குளம்.

Next Story