தீ விபத்தை தடுப்பது குறித்து எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


தீ விபத்தை தடுப்பது குறித்து எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x
தினத்தந்தி 22 Sept 2021 5:28 AM IST (Updated: 22 Sept 2021 5:28 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து எழும்பூர் குழந்தை கள் ஆஸ்பத்திரியில், தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு ஒத்திகை நடத்தினர்.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அந்த அசாதாரணமான சூழ்நிலையை எப்படி கையாளுவது, தீயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது, தீயில் காயம் அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி, தீயணைப்பு துறை சார்பில் நேற்று காலையில் நடத்தப்பட்டது.

இதற்காக ஆஸ்பத்திரியில் தீ விபத்து ஏற்பட்டது போன்ற செயற்கை தோற்றம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, தீ விபத்தில் கட்டிடத்துக்குள் சிக்கிய குழந்தைகளையும், வயதானவர்களை, தீயணைப்பு துறையினர் வருவதுக்கு முன்னரே துரிதமாக செயல்பட்டு, பொதுமக்கள் தாங்களாகவே மீட்பது போன்ற ஒத்திகை செய்யப்பட்டது. பின்னர் தீ ஒழிப்பு அலாரம் ஒலிக்க செய்தும், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுப்பது போன்ற ஒத்திகை நடந்தது.

எந்த பதற்றமும் இல்லாமல்

இதனையடுத்து, பொதுமக்கள் தங்களது வீட்டில் சமையல் செய்யும் போது, தீடீரென கியாஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால், அதனை எந்த பதற்றமும் இல்லாமல் எவ்வாறு கையாளுவது போன்ற ஒத்திகையை மாவட்ட தீயணைப்பு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் எழும்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வடிவேல், ஜேம்ஸ் அருள்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய தீயணைப்பு குழுவினர் செய்து காண்பித்தனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி, மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் வெங்கடேசன், ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் பாராட்டினார்கள்.

Next Story