திருவாரூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி - கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
திருவாரூரில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
திருவாரூர்,
திருவாரூர் நகராட்சி சார்பில் தென்றல் நகர் பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றை தூர்வாரும் பணி நடந்தது. பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணி நடைபெறும். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவாரூர் பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் பிரபாகரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ், முன்னாள் நகரசபை துணைத் தலைவர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைபோல திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூய்மை செய்யும் பணி 5 நாட்கள் நடக்கிறது. இதில் முதற்கட்ட பணியாக மன்னை சாலை, அகமுடையார் தெரு, மற்றும் ஆட்டூர் சாலை பகுதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்டு, அங்கிருந்த கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள், நகராட்சி ஊழியர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையர் (பொ) என்.சந்திரசேகரன் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் அருள்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் இருந்தனர்.
Related Tags :
Next Story