சாலை அமைக்காததை கண்டித்து ஆடு, மாடுகளுடன் சாலையில் குடியேறி சமையல் செய்து போராட்டம் - தஞ்சை அருகே பரபரப்பு


சாலை அமைக்காததை கண்டித்து ஆடு, மாடுகளுடன் சாலையில் குடியேறி சமையல் செய்து போராட்டம் - தஞ்சை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sept 2021 6:56 PM IST (Updated: 22 Sept 2021 6:56 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சாலை அமைக்காததை கண்டித்து ஆடு, மாடுகளுடன் சாலையில் குடியேறி சமையல் செய்து போராட்டம் நடைபெற்றது.

வல்லம்,

தஞ்சை அருகே செங்கிப்பட்டி- ஆச்சாம்பட்டி சாலை அமைக்கும் பணிகளின் போது சாலையை உடைத்து அப்படியே விட்டதன் விளைவாக தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து சாலையை முறையாக அமைக்க வலியுறுத்தி ஏற்கனவே 2 முறை சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பூதலூர் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 

ஆனால் அளிக்கப்பட்ட உறுதிமொழியை நெடுஞ்சாலைத்துறையினரும், கட்டுமான நிறுவனத்தினரும் நிறைவேற்றாததால் நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆச்சாம்பட்டியில் 3 மணி நேரம் சாலையை மறித்து சாலையில் ஆடு மாடுகளுடன் குடியேறி சமையல் செய்து மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பூதலூர் தாசில்தார் ராமச்சந்திரன், நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், திருவையாறு உதவி கோட்ட பொறியாளர் ராம்பிரபு, செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தையின் முடிவில் அங்குள்ள ஆச்சான் ஏரியின் குறுக்கே உள்ள பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும், அதற்காக தற்காலிக மாற்று சாலை அமைத்து கொடுக்கப்படும் என்றும், புதிய பாலம் அமைத்து தரும் வரை கனரக வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விடுவது என்றும், புதிய சாலை அமைக்கும் பணிகளை ஒரு மாதத்துக்குள் தொடங்கி விரைந்து முடிப்பது என்றும், அதுவரை விபத்து நடக்காமல் தடுக்கும் வகையில் முறையான அறிவிப்புகள் செய்து சாலை பராமரிப்புகளை மேற்கொள்வது என்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உறுதிமொழி அளித்தனர். 

இதை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை போராட்டக்காரர்கள் ஒத்திவைத்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் லதா, இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் செந்தில்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் நாகராஜ், பாலு மற்றும் பலர் இருந்தனர்.

Next Story