நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலைரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. ஆனால் உந்து சக்தி குறைந்ததால் 10 மணி நேரம் தாமதமாக ரெயில் வந்தது.
குன்னூர்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஆரம்ப காலத்தில் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. இதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து நிலக்கரி நீராவி என்ஜின் தயாரிக்கப்பட்டு, கப்பல் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் இயக்கும்போது உந்து சக்தி குறையும் நேரத்தில் ஊட்டிக்கு ரெயில் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் மேட்டுப்பாளையம்&குன்னூர் இடையே பர்னஸ் ஆயில் நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டது. மேலும் குன்னூர்&ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதன்முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை கொண்டு ரூ.8 கோடியே 7 லட்சம் செலவில் திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் நிலக்கரி நீராவி என்ஜின் உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, மலைரெயிலில் பொருத்தி சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் மலைரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று முன்தினம் காலை 9.15 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 3 பெட்டிகளுடன் குன்னூருக்கு மலைரெயில் சோதனை ஓட்டமாக புறப்பட்டது. அதில் சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை நிலக்கரி நீராவி என்ஜின் நல்ல முறையில் இயங்கியது.
ஆனால் மலைப்பாதையில் ஏற தொடங்கியதும், என்ஜினுக்கு நீராவி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் உந்து சக்தி குறைந்து, கல்லார்&குன்னூர் இடையே சுமார் 16 இடங்களில் ரெயில் நின்றது. உந்து சக்தி கிடைத்ததும் தொடர்ந்து ரெயில் இயக்கப்பட்டது. இதனால் தாமதமாக இரவு 10.15 மணிக்கு குன்னூருக்கு ரெயில் வந்தது.
வழக்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு ரெயிலில் வர 3 மணி நேரம் ஆகும். ஆனால் உந்து சக்தி கிடைக்காமல் போனதால், 10 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story