கூடலூரில் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி: தனியார் பள்ளி மூடல்
கூடலூரில் நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து தனியார் பள்ளி மூடப்பட்டது. அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கூடலூர்,
கொரோனா பரவல் குறைந்ததால், தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில இடங்களில் ஆசிரியர்கள், மாணவ&மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தினர். இதில் பள்ளி நிர்வாகிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் தனியார் பள்ளிக்கூட மாணவ&மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வகுப்பறைகள் உள்பட பள்ளிக்கூட கட்டிடங்கள் முழுவதிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, பள்ளி நிர்வாகிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன் முடிவுகள் தெரியும் வரை பள்ளிக்கூடம் மூடி வைக்கப்படும்.
மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை நன்றாக சோப் மூலம் கழுவிய பின்னரே உணவு சாப்பிட வேண்டும். பெற்றோர் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றனர்.
Related Tags :
Next Story