வன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
கூடலூரில் கன்றுக்குட்டியை அடித்துக்கொன்று புலி அட்டகாசம் செய்தது. இதனால் வன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சியில் அம்பலமூலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை அடித்து கொன்று புலி அட்டகாசம் செய்து வருகிறது. இந்த புலியை பிடிக்கக்கோரி கடந்த வாரம் வனத்துறையினரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் புலி நடமாட்டத்தை கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி பகுதியில் ஷாஜி என்பவருக்கு சொந்தமான 6 மாத கன்றுகுட்டியை புலி அடித்து கொன்றது.
இதை அறிந்து நேற்று காலையில் அங்கு திரண்ட பொதுமக்கள், உயிரிழந்த கன்றுக்குட்டியின் உடலை வாகனத்தில் ஏற்றி கூடலூர் கோட்ட வன அலுவலகத்துக்கு ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் கொண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, உதவி வனப்பாதுகாவலர் ஈஸ்வரன், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வனத்துறை உயர் அதிகாரிகள் சென்னையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உள்ளதால், அவர்கள் கூடலூருக்கு வர தாமதம் ஏற்படும். அவர்கள் வந்த பிறகுபேச்சுவார்த்தை நடத்தி கொள்ளலாம். எனவே தற்போது போராட்டத்தை கைவிடுங்கள் என்று ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கேட்டுக்கொண்டார். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்று கொள்ளவில்லை.
தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலகத்துக்கு எதிரே உள்ள கூடலூர்&மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 11.45 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மதியம் 12.45 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் தற்காலிகமாக மறியல் கைவிடப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து கூடலூர் கோட்ட வன அலுவலகத்தில் இருந்து பொதுமக்கள் ஊர்வலமாக தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடிக்கு வந்தனர். அப்போது உயிரிழந்த கன்று குட்டியின் உடலையும் தூக்கி வந்தனர். பின்னர் கூடலூர் எம்.எல்.ஏ. பொன் ஜெயசீலன் தலைமையில் 2.30 மணிக்கு மீண்டும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் உள்ள மண்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஊருக்குள் புகுந்து விநாயகன் என்ற காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது. தற்போது கால்நடைகளை கொண்டு புலி அட்டகாசம் செய்கிறது. இதை தடுக்க கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் போராட்டம் நடத்தியும் தீர்வும் காணப்படவில்லை. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறினால் மட்டுமே போராட்டம் வாபஸ் பெறப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து மாலை 5.30 மணிக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் மற்றும் அதிகாரிகள் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புலியை கூண்டு வைத்து பிடிப்பதாக உறுதி அளித்தனர்.
மேலும் விநாயகன் யானை ஊருக்குள் வராமல் தடுக்க 4 கும்கி யானைகளை ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் நிறுத்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்று 6.30 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின்னரே அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story