மனோஜ்சாமி உள்பட 2 பேரிடம் போலீஸ் ஐ.ஜி. விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனோஜ்சாமி உள்பட 2 பேரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் விசாரணை நடத்தினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்&அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், திபு, ஜித்தின்ஜாய், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி, சதீசன், உதயகுமார், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சயான், விபத்தில் இறந்த கனகராஜின்(ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபால் மற்றும் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்தி பதிவு செய்தார். கடந்த 2&ந் தேதி கோடநாடு வழக்கு தொடர்பாக முழு விசாரணை நடத்த போலீசாருக்கு ஊட்டி கோர்ட்டு 4 வார கால அவகாசம் வழங்கியது. இதையடுத்து அரசு தரப்பு சாட்சிகளிடம் தீவிர விசாரணை நடத்தி முழு உண்மையை வெளியே கொண்டுவர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்பட சிலரிடம் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரடி விசாரணை நடத்தினார். மேலும் சாட்சிகள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று தனிப்படையினர் ரகசிய விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய மனோஜ் குன்னூர் சிறையில் உள்ளார். மீதமுள்ள 9 பேர் ஜாமீனில் உள்ளனர். இதில் சம்சீர் அலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஜாமீனில் உள்ள சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி ஆகிய 2 பேர் விசாரணைக்கு ஆஜராக தனிப்படை சம்மன் வழங்கியது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகிய 2 பேர் தங்களது வக்கீல்களுடன் விசாரணைக்கு வந்தனர். அவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தனர். மதியம் 12.30 மணிக்கு விசாரணை தொடங்கியது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் தலைமையில் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் முன்பு சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பூசாரியான மனோஜ்சாமியிடம் சென்று சிறப்பு பூஜை செய்ததாக தெரிகிறது. அப்போது கோடநாட்டுக்கு செல்லலாமா? என்று கேட்டறிந்த பின்னரே சம்பவத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. அவர்களுடன், பூசாரியான மனோஜ்சாமியும் சென்று உள்ளார்.
இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்து கொண்டனர். அவர்களிடம் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. விசாரணை இன்றும்(வியாழக்கிழமை) தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிஜின், சதீசன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) திபு, ஜித்தின்ஜாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணைக்கு பிறகு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களிடம் கூறும்போது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 29 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி ஆகியோரது வக்கீல் விஜயன் கூறும்போது, திபு உள்பட மற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நேர்மையாக நடப்பதால் மனதில் பயம் இல்லாமல் தகவல்களை கூறுவார்கள். இது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story