திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுபாட்டில்கள் பதுக்கல்
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்தவர் இன்பராஜ் (வயது 53). இவர் அனுமந்தராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இந்தநிலையில் அவரது தோட்டத்து வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை சப்&இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஷேக் தாவூத் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று காலை தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள இன்பராஜூவுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வீட்டுக்குள்ளேயும், வீட்டின் மாடியிலும் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் திறந்து பார்த்தபோது மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெட்டிகளில் இருந்த சுமார் 11 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
6 பேர் கைது
பின்னர் இன்பராஜை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரும், அதே ஊரை சேர்ந்த கோமதி சங்கர் (34), கொங்கேஸ்வரன் (21), சிவகங்கையை சேர்ந்த பிரபு (24), சிவா (23), சங்குபாண்டியன் (36) ஆகியோர் சேர்ந்து புதுச்சேரியில் இருந்தும், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்தும் மதுபாட்டில்களை வாங்கி இன்பராஜின் தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்தனர். பின்னர் அவற்றை சில்லறை விலைக்கு மதுபிரியர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்பராஜ் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்பராஜின் மனைவி நிர்மலா, தற்போது அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story