மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபர்
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம்:
கம்பம் நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான வீடுகளில், மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை நிறுத்துவதற்கான போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனங்களை தங்களது வீடுகளின் முன்பு உள்ள தெருக்களில் நிறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு நிறுத்தப்படுகிற மோட்டார் சைக்கிள்களில் பெட்ரோலை திருடி செல்வது தொடர்கதையாகி விட்டது.
இந்தநிலையில் கோம்பை சாலை தெரு பகுதியில், வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் திருடும் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மர்ம நபர் ஒருவர் கேனுடன் நடந்து வருகிறார். பின்னர் தெருவில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து, பெட்ரோல் டியூப்பை துண்டித்து 5 லிட்டர் கேன் ஒன்றை வைத்து விட்டு வாலிபர் செல்கிறார்.
சிறிது நேரத்தில் அந்த கேனை அவர் எடுத்து செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இரவு நேரத்தில் கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story