நெடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி ஆதார், ரேஷன் கார்டுகளை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்ற மக்கள்
நெடி கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்க கோரி ஆதார், ரேஷன் கார்டுகளை அதிகாரிகளிடம் கிராம மக்கள் ஒப்படைக்க முயன்றனர். இதையடுத்து பேச்சுவார்தைக்கு வந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடி கிராமம். தற்போது இந்த கிராமம் மொழியனூர் ஊராட்சியில் உள்ளது. இந்த நிலையில் நெடி கிராமத்தை பிரித்து தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி நெடி கிராம மக்கள் ஒன்றுகூடி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நெடி கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்காவிட்டால், தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்தனர்.
இதையடுத்து, நேற்று காலை நெடி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களை தாசில்தாரிடம் ஒப்படைக்க திண்டிவனம் தாலுகா அலுவலகத்துக்கு வாகனங்களில் புறப்பட்டனர்.
இதுபற்றி அறிந்த திண்டிவனம் சப்&கலெக்டர் அமித், தாசில்தார் செல்வம் ஆகியோர் அங்கு விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
அவசர அவசரமாக சென்றனர்
இதையடுத்து சப்&கலெக்டரிடம் தங்களது ஆவணங்களை கிராம மக்கள் ஒப்படைக்க முற்பட்டனர். அப்போது சப்&கலெக்டர் அமித் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டு சென்றார். இதை பார்த்த தாசில்தார் செல்வமும் அவருக்கு பின்னால் ஓடினார்.
இருப்பினும் கிராம மக்கள் தங்களது ஆவணங்களை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியபடி பின்தொடர்ந்தனர். ஆனால் அதிகாரிகள் அங்கிருந்து தங்களது வாகனங்களில் ஏறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்வது என்று கிராம மக்கள் முடிவு செய்தனர். அப்போது பெண் ஒருவர், உடனடியாக எங்கள் கிராமத்தை ஊராட்சியாக அறிவிக்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியபடி நின்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 நாட்களுக்குள் தீர்வு
இந்நிலையில் அங்கு திரும்ப வந்த தாசில்தார் செல்வம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்தி, கலெக்டர் டி.மோகனுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தனர்.
இது தொடர்பாக 2 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று கலெக்டர் தெரிவித்ததாக, அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து 2 நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால், ஆவணங்களை நிச்சயம் ஒப்படைப்போம் என்று கூறி கிராம மக்கள் சமாதானம் ஆனார்கள். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
&
நெடி கிராம மக்களிடம் திண்டிவனம் சப்&கலெக்டர் அமித் பேச்சுவார்த்தை நடத்திய போது எடுத்த படம்.
Related Tags :
Next Story