விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே குடிநீர் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள குறுக்கத்தஞ்சேரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குழாய் அமைத்த இடத்தில் இருந்த குழாய்களை அகற்றாமல், அப்பகுதியில் உள்ள வீடுகள், கொட்டகைகளை, சிமெண்டு சாலைகளை சேதப்படுத்தி குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதை கண்டித்தும், ஏற்கனவே இருக்கும் இடத்திலேயே புதிய குழாய் அமைக்க வலியுறுத்தியும் ஊராட்சி மன்ற உறுப்பினர் இளையராஜா தலைமையில் குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story