வால்பாறையில் ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் இல்லாததால் பொது இடங்களில் வைத்து பொருட்கள் வழங்கும் அவலம்


வால்பாறையில் ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் இல்லாததால் பொது இடங்களில் வைத்து பொருட்கள் வழங்கும் அவலம்
x
தினத்தந்தி 23 Sept 2021 12:00 AM IST (Updated: 23 Sept 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் இல்லாததால் பொது இடங்களில் வைத்து பொருட்கள் வழங்கும் அவலம்



வால்பாறை

வால்பாறையில் ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் இல்லாததால் பொது இடங்களில் வைத்து பொருட்கள் வழங்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. எனவே நடமாடும் கடை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

ரேஷன்கடைகள் 

வால்பாறையில் பொதுமக்களுக்கு பொதுவினியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க 49 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் வால்பாறை நகரில் 2 ரேஷன் கடைகளுக்கு மட்டுமே கட்டிடங்கள் உள்ளன. மற்ற அனைத்து கடைகளுக்கும் கட்டிடம் கிடையாது.

இதன் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பிலும், எஸ்டேட் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகளிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும் வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் காரணமாக இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.  இது குறித்து எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
 
கட்டிடம் இல்லை 

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் தொந்தரவு அதிகம். இங்கு கடைகள் இருந்தால் அவற்றை உடைத்து உள்ளே இருக்கும் அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை எடுத்து சாப்பிடுவதுடன், அவற்றை நாசப்படுத்தி விடுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. 

இதன் காரணமாக அங்கு ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் இல்லை. அதற்கு பதிலாக வாகனங்களில் பொருட்களை கொண்டு வந்து, ஏதாவது ஒரு பொது இடத்தில் வைத்து பொருட்களை விற்கிறார்கள். பின்னர் மாலையில் அவற்றை எடுத்துச்சென்று விடுகிறார்கள். சில பகுதிகளில் வீடுகளிலேயே பொருட்கள் வைக்கப்படுகிறது. 

பொதுமக்கள் அவதி 

அவற்றின் வாசனையை நுகரும் காட்டு யானைகள் அங்கு வந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி விடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். மேலும் சில பகுதிகளில் பொருட்களும் சரியாக கிடைப்பது இல்லை. 

அத்துடன் பொது இடங்களில் வைத்து பொருட்கள் விற்கும்போது அந்த இடம் சுத்தமாக இருப்பது இல்லை. சில இடங்களில் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை தடுக்க நடமாடும் ரேஷன் கடையை கொண்டு வந்தால் உதவியாக இருக்கும். இல்லை என்றால் காட்டு யானைகள் உடைக்காதவாறு உறுதியாக கட்டிடம் கட்ட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். அதை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

1 More update

Next Story