பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது
பா.ஜனதா பிரமுகர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ளது காரை கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற ராஜேந்திரன். அவரது மகன் கதிரவன் என்ற கதிர் (வயது40). தேவகோட்டை ஒன்றிய பா.ஜனதா கட்சி பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இவருக்கும் காவணவயல் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் பெரியசாமி (37)&க்கும் முன்விரோதம் இருந்துவந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காவணவயல் விலக்கு அருகே கதிர் வரும்போது பெரியசாமி அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் வீரபாண்டி (28) ஆகிய இருவரும் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகாயப்படுத்தினர். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பார்வையிட்டார். அவரது ஆலோசனையின்படி தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story