கிணற்றில் மாயமான மாணவன் பிணமாக மீட்பு
சிவகாசியில் கிணற்றில் மாயமான மாணவன் பிணமாக மீட்கப்பட்டான்.
சிவகாசி,
சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள கம்மவார் காலனியை சேர்ந்த கருப்பசாமி மகன் வெற்றிவேல் (வயது14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. நீண்டநேரமாக மாணவன் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் உதவியுடன் கிணற்றில் மூழ்கிய மாணவனை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் விருதுநகரில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நவீன நீர்மூழ்கி கேமராவை கொண்டு நீண்டநேரமாக மாணவனை தேடினர். தீயணைப்பு வீரர்களின் 18 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மாணவன் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.
Related Tags :
Next Story