தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் வாய்க்கால் அடைப்பு சரி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் குழுமணி கிராமத்தில் சமுத்திரம் தெருவில் இருந்து சந்தன வாய்க்கால் வரை கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கழிவுநீர் கலந்து தெருவில் செல்கிறது. இதனை தவிர்க்க கழிவுநீர் வாய்க்கால் அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குழுமணி, திருச்சி.
காய்கறி கழிவு, குப்பைகளால் துர்நாற்றம்
புதுக்கோட்டை வாரச்சந்தை அருகே காய்கறி கழிவு, குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே காய்கறி கழிவு மற்றும் குப்பைகளை அகற்ற நகராட்சி சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வியாபாரிகள், புதுக்கோட்டை.
வெறிநாய்கள் தொல்லை
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அயன்ரெட்டியப்பட்டி இளங்காகுறிச்சியில் அதிக அளவில் வெறிநாய்கள் கடைவீதியிலும், தெருக்களிலும் சுற்றித்திரிகின்றன. அவற்றால் தொல்லை ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. எனவே வெறிநாய்களை பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இளங்காகுறிச்சி, திருச்சி.
வாய்க்காலில் தேங்கிய கழிவுநீர்
புதுக்கோட்டை நகராட்சி 23-வது வார்டு திருவப்பூர் கீழவீதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரமேஷ், திருவப்பூர், புதுக்கோட்டை.
பூங்காவில் ஆபத்தான விளக்கு
திருச்சி கீழப்புலிவார்டு ரோடு லூர்துசாமி பிள்ளை பூங்காவின் உள்ளே குழந்தைகள் விளையாட்டு பகுதி அருகே உள்ள கம்பத்தின் மின் விளக்கு தொங்கிய நிலையில் காற்றில் ஆடுகிறது. காற்று பலமாக வீசும் சமயத்தில் வயர் அறுந்து விளக்கு கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பூங்காவிற்கு பொழுதுபோக்க வருகின்ற குழந்தைகள், பெண்கள், முதியோர் மற்றும் நடைபயிற்சி செய்வோர் மீது மின் விளக்கு விழும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மின்விளக்கை சரி செய்ய வேண்டும்.
சுவாமிநாதன், திருச்சி.
கழிப்பறை சீரமைக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கோத்திரபட்டி ஊராட்சியில் மலைக்குடிப்பட்டி புதிய சந்தை கட்டிடத்திற்கு அருகில் உள்ள கழிப்பறை பயன்படாமல், சீர்கேடாக உள்ளது. அதனை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், மலைக்குடிப்பட்டி, புதுக்கோட்டை.
வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்
அரியலூர் வடக்கு ஒன்றியம் நல்லாம்பத்தை கிராமத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இருபுறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு மழைநீர் புகுந்து சேறும், சகதியுமாக மாறும் நிலை உள்ளது. எனவே இதற்கு உடனடி தீர்வு காண, வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், நல்லாம்பத்தை, அரியலூர்.
மின்தடையால் அவதி
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் வாழ்மால்பாளையம் கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
க.சரவணன், வாழ்மால்பாளையம், திருச்சி.
நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் இருந்து ஆலவயல், உலகம்பட்டி வழியாக துவரங்குறிச்சிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் மற்றும் ஆலவயல், நகரப்பட்டி வழியாக பாலக்குறிச்சிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ் ஆகியவை நிறுத்தப்பட்டன. இதேபோல் பாலக்குறிச்சி, விராலிமலை, திருச்சி வழியாக திருப்பூர் & மணப்பாறை, குளித்தலை வழியாக சேலத்திற்கு இயக்கப்பட்ட புறநகர் பஸ்களும் நிறுத்தப்பட்டன. அவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை வேண்டும்.
கோபால், ஆலவயல், புதுக்கோட்டை.
புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்
பெரம்பலூர் நகராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் சுந்தர் நகர் முதல் தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து விழுவது போல் நிற்கிறது. மேலும் அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருகிறது. மின்கம்பத்தின் வழியாக உயர் மின்சாரம் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்வோர்கள் ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, சுந்தர் நகர் முதல் தெரு, வெங்கடேசபுரம், பெரம்பலூர்.
Related Tags :
Next Story