கடைசி நாளில் மனுதாக்கல் செய்ய குவிந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள்
நெல்லை, தென்காசியில் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சி வேட்பாளர்கள் குவிந்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வருகிற 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கியது. அன்று முதல் ஏராளமானவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை, சேரன்மாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய 9 பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திலும் மாவட்ட கவுன்சிலர் பதவி, யூனியன் கவுன்சிலர் பதவி, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் நேற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள், பல்வேறு அமைப்புகளின் வேட்பாளர்கள் குவிந்தனர். நெல்லை மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். மனு செய்ய வந்தவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்ததால் ஆங்காங்கே மக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.
மேலும், பாளையங்கோட்டை மற்றும் ராதாபுரம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். வேட்பாளர்கள் கார் மற்றும் வாகனங்களில் வந்ததால் பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெருக்கடியை போலீசார் சரிசெய்தனர். வேட்பு மனு தாக்கலையொட்டி பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அருணாசலம் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மானூர், அம்பை, பாப்பாக்குடி, நாங்குநேரி ஆகிய பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் மாலை 4.30 மணிக்கு பிறகு ஏராளமானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அங்கு இரவு 7 மணிவரை மனு தாக்கல் நடந்தது.
மேலும் அரசியல் கட்சியினர் தங்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு இடையே மாவட்ட கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு இடம் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால் கூட்டணி கட்சிக்கு எதிராக மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, வாசுதேவநல்லூர் ஆகிய 10 பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தென்காசி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு நேற்று காலையில் இருந்தே பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடத்தில் கூட்டமாக செல்லக்கூடாது என்பதால் அலுவலகத்தின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்பவருடன் 4 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மேலும், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கலெக்டரின் முகாம் அலுவலகம், புதிய பஸ் நிலையம், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட நீதிமன்றம் ஆகிய முக்கிய இடங்கள் உள்ளன.
இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
Related Tags :
Next Story