காவலர் பணிக்காக மறு உடற்தகுதி தேர்வு


காவலர் பணிக்காக மறு உடற்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 23 Sept 2021 1:12 AM IST (Updated: 23 Sept 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

காவலர் பணிக்காக மறு உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் நடந்தது

காவலர் பணிக்காக மறு உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் நடந்தது

திருச்சி, செப்.23&
கோர்ட்டு உத்தரவு படி காவலர் பணிக்காக மறு உடற்தகுதி தேர்வு திருச்சியில் மீண்டும் நடந்தது. இதில் 132 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.
காவலர் பணிக்கான தேர்வு
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 10 ஆயிரத்து 906 காவலர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் 13&ந்தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கடந்த ஜூலை 26&ந்தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் கொரோனா காரணமாக தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களும், உடற்தகுதி அளவீட்டில் குளறுபடி இருப்பதாகவும் எனவே தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கேட்டு பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் உடற்தகுதி தேர்வு நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மீண்டும் உடற்தகுதி தேர்வு
அதன்படி தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் காவலர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ளமுடியாத 113 பேர் மற்றும் உடற்தகுதி தேர்வில் குளறுபடி உள்ளதாக மறு உடல் அளவீட்டிற்காக வழக்கு தொடர்ந்த 111 பேர் என்று மொத்தம் 224 பேருக்கு மீண்டும் உடற்தகுதி தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது.
இதில் ஆண்கள் 167 பேரும், பெண்கள் 31 பேரும், ஒரு திருநங்கையும் என்று 199 பேர் கலந்து கொண்டனர். 25 பேர் தேர்வு எழுத வரவில்லை. மறுதகுதி தேர்வில் கலந்து கொள்வதற்கான கோர்ட்டு உத்தரவு ஆணை மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.
132 பேர் தகுதி
அப்போது 7 பேர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டு வர வில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் போலீஸ் வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் அழைத்துவரப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு உயரம், மார்பு அளவு அளவீடு செய்யப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்கள் 1, 500 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இவை அனைத்தும் வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இறுதியில் ஒரு திருநங்கை உள்பட 132 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர். 67 பேர் தகுதி பெறவில்லை. தகுதி பெற்றவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் போன்ற தேர்வுகள் நடைபெற உள்ளது.
.....
பாக்ஸ்
.....
மறுவாய்ப்பில் திருநங்கை தகுதி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே எடக்குடியை சேர்ந்தவர் யாழினி. திருநங்கையான இவர் கடந்த முறை நடந்த உடற்தகுதி தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பட்டியலின் படி 158.7 உயரம் மட்டுமே இருந்ததால் நிராகரிக்கப்பட்டார். இந்தநிலையில், அவர் சென்னை ஐகோர்ட்டில் திருநங்கைகளுக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அளிக்கப்படும் வயது தளர்வை போன்று உயரத்திலும் தளர்வு அளிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்படும் 157 செ.மீ. உயர சலுகை திருநங்கைகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் வந்து உடற்தகுதி தேர்வில் யாழினி கலந்து கொண்டு அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றார்.

Next Story