கடலூர் மாவட்டத்தில் 163 பேர் வேட்பு மனு தாக்கல்
48 பதவி இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 163 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 5 ஒன்றிய வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர், 33 ஊராட்சி வார்டு உறுப்பினர் என 48 காலி பதவி இடங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 79 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி, ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதன்படி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 36 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 28 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 20 பேர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 84 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை 48 பதவிகளுக்கு 163 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் (சனிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.
Related Tags :
Next Story