ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின


ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின
x
தினத்தந்தி 23 Sept 2021 2:31 AM IST (Updated: 23 Sept 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே 4 பைகளில் எடுத்து வந்த ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின

மதுரை, செப்
மதுரை அருகே ரூ.1 கோடி கள்ளநோட்டுகள் சிக்கின. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனை
மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருக்கும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதுதொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் கள்ளிக்குடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் 2 கார்கள் வந்தன. அவற்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். 
கார்களின் உள்பகுதி மற்றும் இருக்கைகளுக்கு கீழ் வைத்திருந்த மொத்தம் 4 பைகளை எடுத்து திறந்து பார்த்த போது, அவற்றில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணநோட்டு கட்டுகளை சோதனையிட்ட போது சில நோட்டுகள் அசல் பணம் என்பதும், மற்றவை கள்ளநோட்டுகள் என்றும் தெரியவந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கார்களில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவர்களில் 2 பேர் ஏற்கனவே கள்ளிக்குடி போலீசில் பதிவான மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
போலீஸ் சீருடை
சிக்கிய 4 பைகளில் ஒரு பையில் ரூ.2 ஆயிரம் கட்டுகள், 2 பைகளில் ரூ.500 கட்டுகள், மற்றொரு பையில் ரூ.100 கட்டுகள் என வைத்து எடுத்து வந்துள்ளனர். இதுதவிர கட்டுக்கட்டாக வெள்ளை நிற காகிதங்களும் இருந்தன.
மேலும் ஒரு காரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அணியும் சீருடையும் இருந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து, கார்களில் வந்த கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த யோகராஜ் (வயது 38) , சென்னையை சேர்ந்த சுனில்குமார் (49), மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த அன்பு என்ற அன்பரசன் (31), கேரளாவை சேர்ந்த டோமி தாமஸ் (50), கோவையை சேர்ந்த அக்பர் (60), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த குமாயூன் (42), கள்ளிக்குடியை சேர்ந்த தண்டீசுவரன் (33), ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (37), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (37), வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (66) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.1 கோடி கள்ளநோட்டுகள்
பிடிபட்ட பணம் குறித்து போலீசார் கூறுகையில், “கார்களில் வந்தவர்களிடம் இருந்து 4 பைகளில் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ரூ.2 அயிரம் கள்ளநோட்டு கட்டுகள்&18, ரூ.500 கள்ளநோட்டு கட்டுகள்&54, ரூ.100 கள்ளநோட்டு கட்டுகள்&18  சிக்கி உள்ளன. அவற்றில் ஒரு சில பணநோட்டுகள் அசல் ஆகும். ஒவ்வொரு கட்டிலும் 100 எண்ணிக்கையில் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேல் பகுதியில் ஒன்றிரண்டு அசல் பணத்தை வைத்துவிட்டு, அதன் கீழே கள்ள நோட்டுகளை வைத்து கட்டி உள்ளனர். மொத்தம் கிட்டத்தட்ட ரூ.1 கோடிக்கான கள்ளநோட்டுகள் சிக்கி இருப்பதாக தெரியவருகிறது. அவர்களிடம் மேலும் சில பைகளில் கள்ளநோட்டுகள் இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதனையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை புழக்கத்தில் விடுவதற்காக இந்த கும்பல் கொண்டு செல்லும் போது, போலீஸ் சோதனையில் சிக்கி இருக்கிறார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்களா, இதற்கு யார்&யாரெல்லாம் உடந்தை, எங்கு இதனை எடுத்துச் செல்ல இருந்தார்கள், அச்சடித்தது எப்படி? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது“ என்றனர்.
மதுரை அருகே ரூ.1 கோடிக்கான கள்ளநோட்டுகள் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story