சிறுத்தை நடமாட்டத்தால் 12 பள்ளிகளுக்கு விடுமுறை
உப்பள்ளி நகரில் உள்ள நிருபதுங்கா மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தை நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
உப்பள்ளி: உப்பள்ளி நகரில் உள்ள நிருபதுங்கா மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சிறுத்தை நடமாடி வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இதையடுத்து அப்பகுதியில் உள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சிறுத்தை நடமாட்டம்
உப்பள்ளி நகரில் நிருபதுங்கா மலைப்பகுதி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியாக உள்ள அப்பகுதியில் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் அப்பகுதி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து அப்பகுதிக்கு இரை தேடி வந்த ஒரு சிறுத்தையை அவர்கள் பார்த்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள பல இடங்களில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்துள்ளதையும் பொதுமக்கள் கவனித்தனர். இதையடுத்து அது பற்றி வனத்துறைக்கு தகவல் அளித்து சிறுத்தையை பிடித்து செல்லும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை சிறுத்தை வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் தப்பி வருகிறது. அதனால் மலைப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள கேட் ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுப்பு
இந்த நிலையில், நிருபதுங்கபெட்டா பகுதியில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை வன ஊழியர்கள் ஊர்ஜிதம் செய்தனர். மேலும், அப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், சக்தி காலனி, ஜனதா பள்ளி, ஜே.கே. ஸ்கூல் ஆகிய பகுதிகளிலும் சிறுத்தையின் கால் தடம் பதிந்துள்ளதை வன ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
தகவலை அறிந்த தார்வார் மாவட்ட கலெக்டர் நிதீஷ்பட்டேல் அப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள 12 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதிக்கு நேரில் சென்ற கலெக்டர் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் அச்சம்
மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் சுரேஷ் இட்டனால், அப்பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா நகரில் சுற்றித்திரியும் நாய்கள், பன்றிகள் ஆகியவற்றை பிடித்து அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். சிறுத்தை நடமாட்டம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், தார்வார் தாலுகா கவளக்கேரி கிராமத்திலும் சிறுத்தையின் கால் தடங்களை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களையும் விழிப்புடன் இருக்க கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அப்பகுதியிலும் வனத்துறையினர் சிறுத்தையை கண்டறிந்து பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
Related Tags :
Next Story