பெங்களூருவில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணி; பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு
பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த 2-வது கட்ட பணிகளை வருகிற 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை முதல்&மந்திரி பசவராஜ்பொம்மை நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த 2-வது கட்ட பணிகளை வருகிற 2024&ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுரங்க பாதை
பெங்களூருவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிவடைந்து சுமார் 50 கிலோ மீட்டர் நீள பாதையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது முதல்கட்டத்தில் நாகசந்திரா முதல் அஞ்சனாபுரா வரையிலும், பையப்பனஹள்ளியில் இருந்து கெங்கேரி வரையிலும் மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொட்டிகெரே முதல் நாகவரா வரை 21.26 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் நாகவரா முதல் ஜெயநகர் தீயணைப்பு நிலையம் அருகில் வரை 13.76 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை அமைக்கப்படுகிறது. இதில் 12 ரெயில் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. 7 கிலோ மீட்டர் நீளத்திற்கு உயர்த்தப்பட்ட பாதை அமைக்கப்படுகிறது. சுரங்க பாதை அமைக்க 9 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 3.84 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
பசவராஜ் பொம்மை நேரில் ஆய்வு
இதில் உர்ஜா என்ற சுரங்கம் தோண்டும் எந்திரம், கன்டோன்மென்ட் முதல் சிவாஜிநகரில் வரை சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டது. இது கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 30&ந் தேதி பணியை தொடங்கியது. நேற்று அதன் இலக்கை அடைந்து, அந்த எந்திரம் வெளியே வந்தது. இந்த சுரங்க எந்திரம் வெளியே வரும் நிகழ்வை சிவாஜிநகரில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:&
2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் வருகிற 2025-ம் ஆண்டு முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணிகளை ஓராண்டு முன்கூட்டியே அதாவது 2024-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏனென்றால் மெட்ரோ ரெயில் பாதை பணிகளால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த திட்ட பணிகளை விரைவாக முடித்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். மக்கள் தங்களின் இடத்திற்கு விரைவாக சென்றடைய முடியும்.
2024-ம் ஆண்டுக்குள் முடிக்க உத்தரவு
இந்த மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை நான் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுவேன். எக்காரணம் கொண்டும் தாமதம் இல்லாமல் இந்த பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன். சர்வதேச விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசும் தேவையான நிதியை வழங்கி, பணிகளை விரைந்து முடிக்க ஆர்வம் காட்டுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த 2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 695 கோடி ஆகும்.
Related Tags :
Next Story