தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2021 5:19 PM IST (Updated: 23 Sept 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
காலமுறை ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்கம், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், உள்ளாட்சி சம்மேளனம் ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உள்ளாட்சி சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் மனோகரன், முனிசிபல் பஞ்சாயத்து பொது பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். சம்மேளன மாவட்ட செயலாளர் புகழேந்தி வரவேற்று பேசினார். ஏ.ஐ.டி.யு.சி. பொது பணியாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் உள்ளாட்சி பணியாளர் சம்மேளன ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் மணி, மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், பொது பணியாளர் சங்க மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன், மாநில துணைத்தலைவர் சுதர்சனம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கவுரவத்தலைவர் ரவீந்திரபாரதி, மாவட்ட துணைச்செயலாளர்கள் நடராஜன், சரவணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் தமிழ்வாணன், கந்தசாமி, ராமன், வணங்காமுடி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முழுநேர பணியாளர்களாக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும். முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பெருந்தொற்று கால நிவாரணங்களை வழங்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story