யானைகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை


யானைகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு செல்ல தடை
x
தினத்தந்தி 23 Sept 2021 6:39 PM IST (Updated: 23 Sept 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

யானைகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்தது.

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என கொடைக்கானல் வர்ணிக்கப்படுகிறது. இங்குள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகை தருவார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது. பின்னர் தமிழக அரசு உத்தரவின்பேரில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு பொதுமக்கள் பார்வையிட சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து ஆர்வத்துடன் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 5 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடமான மோயர் பாயிண்ட் என்ற இடத்துக்குள் நுழைந்தது. பின்னர் அந்த யானைகள் கூட்டம் அங்கிருந்த ராஜு என்பவரின் கடை உள்பட பல்வேறு கடைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலை வனத்துறை ஊழியர்கள் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அவர்கள், யானைகளால் கடைகள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
தடை
இதைத்தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக வனப்பகுதியில் உள்ள குணாகுகை, பில்லர் ராக்ஸ், பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா இடங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். 
இந்நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சுற்றுலா பயணிகளை வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு அனுமதிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story