ஓட்டலில் இருதரப்பினர் மோதல்; நாற்காலிகள் வீச்சு
கோவில்பட்டியில் ஒரு ஓட்டலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ஒரு ஓட்டலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக்கொண்டனர். இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஓட்டலில் தகராறு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர்கள் அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கர நாராயணன். நண்பர்களான இவர்கள் 5 பேரும் கோவில்பட்டி மெயின் ரோடு ராமசாமிதாஸ் பூங்கா எதிரில் உள்ள ஒரு ஓட்டலில் அடிக்கடி சாப்பிடச் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவிலும் அவர்கள் 5 பேரும் ஓட்டலில் சாப்பிட சென்றனர். அங்கு கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த நண்பர்களான பிரசாந்த், சிவராமன், முருகன் ஆகிய 3 பேரும் சாப்பிட சென்றனர்.
அப்போது அருண்குமார் உள்ளிட்ட 5 பேரும் ஓட்டல் ஊழியருடன் சேர்ந்து சிரித்து பேசினர். அப்போது தங்களைப் பார்த்துதான் கேலி செய்து சிரிப்பதாக கருதிய பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அருண்குமார் உள்ளிட்டவர்களைக் கண்டித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் ஓட்டலில் இருந்த நாற்காலிகள், சாம்பார் வாளி, டம்ளர், சொம்பு உள்ளிட்ட பாத்திரங்களையும் தூக்கி வீசி தாக்கிக்கொண்டார்கள்.
8 பேர் மீது வழக்கு
ஓட்டலில் சாப்பிட்டு கொண்டவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தலைதெறிக்க ஓடினர். ஓட்டல் முழுவதும் சாம்பார் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் சிதறி கிடந்ததால் போர்க்களம் போன்று காட்சி அளித்தது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின்பேரில், அருண்குமார், பிரசாந்த் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டலில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story