மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
தூத்துக்குடி மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதில் ஒருபுறம் சாலை அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. மறுபுறம் சாலை பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதனால் அந்த சாலையோரத்தில் இசக்கியம்மன் கோவில் அருகே சாலை பணிக்கு தேவையான பொருட்களை வைப்பதற்காக கன்டெய்னர் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கன்டெய்னரை சாலையின் மறுபுறம் மாற்றி வைக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு கிரேன் மூலம் கன்டெய்னரை இரும்பு கயிறால் கட்டி தூக்கினர்.
வாலிபர் சாவு
அப்போது கன்டெய்னர் திரும்பாமல் இருப்பதற்காக தொழிலாளிகளான தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை எஸ்.குமாரபுரத்தை சேர்ந்த சங்கரசுப்பிரமணியன் மகன் காமாட்சிநாதன் (வயது 22), திரேஸ்புரத்தை சேர்ந்த ஜோயல் (33) ஆகியோர் கன்டெய்னரை பிடித்து இருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது. கிரேன் ஆபரேட்டர் கன்டெய்னர் பெட்டியை வேகமாக மேலே தூக்கிய போது, மேலே சென்று உயர் அழுத்த மின்சார ஒயரில் கிரேன் உரசியது.
இதில் கிரேன் மூலம், கன்டெய்னர் பெட்டியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அதனை பிடித்து கொண்டு இருந்த காமாட்சிநாதன், ஜோயல் ஆகியோர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட காமாட்சிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஜோயல் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story