மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
குன்னத்தூர் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
குன்னத்தூர்
குன்னத்தூர் அருகே மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வாலிபர்கள்
குன்னத்தூர் அருகே எடையபாளையம் ஊராட்சி வெங்கமேட்டை சேர்ந்தவர் விஜய் வயது 19. இவருடைய நண்பர் சதீஷ்19. இவர்கள் 2 பேரும் அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவரபாளைத்தில் நடைபெறுகின்ற மாரியம்மன் கோவில் கம்பம் ஆட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கோவிலில் கம்பம் ஆட்டம் முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு விஜய் மற்றும் சதீஷ் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற நண்பர்கள் வேறு மோட்டார் சைக்கிளிலும் வெங்கமேடு நோக்கி வந்துகொண்டிருந்தனர். இதில் விஜய் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின் இருக்கையில் சதீஷ் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவர்கள் ஒன்றுகொன்று மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு வந்துள்ளனர்.
பலி
வெங்கமேடு அருகே திருவள்ளுவர் நகர் வந்தபோது விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 2 பேரும் பலத்த காயம்அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அருகில் உள்ளவர்கள் விஜய்யை மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் இறந்தார்.
சதீஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story