தபால் நிலைய சேமிப்பு கணக்கில் பணம் கையாடல் செய்த முன்னாள் கிளை அதிகாரி கைது
தபால் நிலைய சேமிப்பு கணக்கில் பணம் கையாடல் செய்த முன்னாள் கிளை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் உதவி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பிரவீண் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தபால் நிலையத்தின் சேமிப்பு கணக்குகளை தணிக்கை செய்தனர்.
அப்போது அந்த தபால் நிலையத்தில் கிளை அதிகாரியாக பணியாற்றி வந்த திருக்கோவிலூர் அருகே திருப்பாலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜகுரு (வயது 33) என்பவர் கடந்த 14.6.2007 முதல் 13.6.2018 வரை அவர் பணிபுரிந்த காலத்தில் தபால் நிலைய கணக்குகளில் கமலக்கண்ணனின் மகள் நிமாஷினி பெயரில் இருந்த கணக்கில் இருந்து ரூ.17 ஆயிரமும், ஜெயராணியின் மகள் சாதனா பெயரில் உள்ள கணக்கில் இருந்து 13.6.2015 முதல் 17.5.2018 வரை ரூ.20 ஆயிரமும், செந்தமிழ்செல்வியின் மகள் யாழ்மொழி பெயரில் உள்ள கணக்கில் இருந்து 8.6.2017 முதல் 6.4.2018 வரை ரூ.11 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.48 ஆயிரத்தை கையாடல் செய்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
முன்னாள் கிளை அதிகாரி கைது
இதுகுறித்து உதவி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பிரவீண், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகுரு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இருதயராஜ், ரவீந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படையினரான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார், ராஜகுருவை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருக்கோவிலூர் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்றபோது ராஜகுருவை தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். கைதான ராஜகுரு ஏற்கனவே பணியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.