ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் அ தி மு க , பா ஜ க வேட்பாளர்கள் 5 பேரின் மனுக்கள் நிராகரிப்பு
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்ட 19 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 773 உள்ளாட்சி பதவிகளுக்கு 13 ஆயிரத்து 878 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட மாவட்ட ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அ.தி.மு.க. மாற்று வேட்பாளரின் மனுவை தவிர மீதமுள்ள 7 பேரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அதேபோல் மாவட்ட ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர், பா.ஜ.க, பா.ம.க. வேட்பாளர்கள் என 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தி.மு.க. வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர், நாம்தமிழர் கட்சி வேட்பாளர் என 3 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்யாததால் அ.தி.மு.க.. பா.ஜ.க. மற்றும் பா.ம.க. வேட்பாளர்கள் 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
காரை முற்றுகையிட்டனர்
இந்த நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்து தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வகுமரன் காரில் வெளியே செல்ல முயன்றபோது அவரை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர். அப்போது இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவிப்பு பலகையில் ஒட்டிச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து முற்றுகையில் ஈடுபட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், பா.ஜ.க. ஒன்றிய தலைவர்கள் சுந்தர், சேகர் உள்பட 19 பேரை கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
வழக்கு பதிவு
பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். கைது செய்யப்பட்ட 19 பேரும் இரவில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்ட அ.தி.மு.க., பா.ஜ.க. வினர் 19 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story